Technical Civil In Tamil

Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


திங்கள், 13 அக்டோபர், 2025

கட்டடங்களுக்கு உண்டாகும் மழைக்கால நோய்கள்

 கட்டடங்களுக்கு  உண்டாகும் மழைக்கால நோய்கள்

கட்டிடப் பராமரிப்பு: மழைக்காலத்தில் வீட்டைப் பாதுகாக்கும் வழிகள்

மழைக்காலம் இந்த முறை வழக்கத்தை விட நீடித்துவிட்டதால், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழையும் வெள்ளமும் நம் வீடுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தன. இத்தகைய சூழலில், நம் வீடுகளைப் பராமரிப்பது மிகவும் அவசியம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வண்ணம் பூசுதல், இரும்புக் கம்பிகள் துருப்பிடிக்காமல் இருக்க பெயிண்ட் அடித்தல் ஆகியவை அடிப்படைப் பராமரிப்புப் பணிகளாகும். கட்டுமானத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை உடனுக்குடன் சரிசெய்தால், கட்டிடம் அழகாகவும் நீடித்து நிலைக்கும். இது கட்டிடத்தின் ஆயுளையும் அதிகரிக்கும்.

சென்னை பொதுப்பணித் துறை கட்டிடம் 150 ஆண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. ரிப்பன் கட்டிடம் போன்றவையும் நல்ல பராமரிப்பால் நேர்த்தியாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றன. நட்சத்திர ஹோட்டல்கள், மருத்துவமனைகள் போன்ற பல கட்டிடங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல தனியார் கட்டிடங்களும் கூட நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கின்றன.

ஆனால், பல தனியார் வீடுகள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை. உரிமையாளர்கள் செலவு செய்யத் தயங்குவதே இதற்குக் காரணம். "பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லி அவர்கள் இதைப் பொருட்படுத்துவதில்லை. சன் ஷேடுகள் துருப்பிடித்து விழும் நிலையில் இருந்தாலும், கழிப்பறையில் நீர்க்கசிவு ஏற்பட்டு சுவர்களின் வண்ணப் பூச்சு உதிர்ந்தாலும், செங்கல் கட்டுமானம் வெளியே தெரிந்தாலும், அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிறார்கள்.

அவர்களுக்குப் பராமரிப்புப் பணிகள் செய்யாமல் இருந்தால், "பணம் யார் தருவது?" என்று நம்மைப் போன்ற பொறியாளர்களைக் கேட்பார்கள். அவர்கள் வீடு நீடித்து நிலைக்க வேண்டுமானால், அவர்கள்தான் செலவு செய்ய வேண்டும். பல லட்சங்கள், கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடத்தைப் பராமரிப்பதற்குத் தயங்குவது தேவையற்ற செலவு என்ற தவறான மனநிலைதான் மக்களிடையே உள்ளது.

கட்டிட உரிமையாளருக்கு ஏற்ற வகையில், குறைந்த செலவில் நீடித்து நிலைக்கக்கூடிய கட்டிடத்தைப் பெற சில ஆலோசனைகளை இங்கே தருகிறேன்:

கட்டிடப் பராமரிப்பு தேவைப்படும் இடங்கள்:

  1. மொட்டைமாடி
  2. கழிப்பறை
  3. சமையலறை
  4. தரை (Flooring)
  5. வெளிப்புற & உட்புறச் சுவர்கள்

இந்த இடங்களை முறையாகப் பராமரித்து, இங்கு ஏற்படும் கட்டிடப் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்தால், 50% பராமரிப்புப் பணி முடிந்துவிடும். கட்டிடத்தின் ஆயுளும் நீடிக்கும்.

மழை மற்றும் வெயிலால் வெளிப்புறச் சுவர்களில் உள்ள வண்ணப் பூச்சுகள் நிறம் மங்கி, ஆங்காங்கே கருப்புத் திட்டுகள் தோன்றி, கட்டிடம் பழையது போல் காட்சியளிக்கும்.
ஐந்து, ஏழு அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அவசியம் வண்ணம் பூசி, கட்டிடத்தைப் பராமரித்து, புதுப்பொலிவுடன் வாழ்நாளை அதிகரிக்கலாம்.

தற்காலத்தில், மழைநீர் செங்கல் கட்டிடத்திற்குள் புகாத வகையில் வெளிப்புற வண்ணப் பூச்சுகள் கிடைக்கின்றன. இந்தப் பெயிண்ட்டைப் பயன்படுத்தினால் கட்டுமானம் பாதிக்கப்படாது. மழைநீரால் செங்கல் கட்டிடத்திற்குள் ஈரம் சென்றால், செங்கற்கள் ஈரமாகி வலுவிழக்கும். மேலும், பச்சை நிறக் காளான் ஏற்பட்டு, வெயில் பட்டவுடன் கருப்பு நிறமாக மாறிவிடும். நீங்கள் உங்கள் கட்டிடத்தின் வெளித்தோற்றத்தைப் பார்வையிட்டு, அதன் நிலையை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

செலவில்லாத பராமரிப்புகள்:

மொட்டைமாடியைச் சுத்தமாக வைத்திருங்கள். அதாவது, மழைநீர் செல்லும் குழாய்களில் உள்ள இலைகள், குப்பைகளை அகற்றி, மழைக்காலங்களில் மழைநீர் சரியாகத் மொட்டைமாடி தளத்திலிருந்து தரைக்குச் செல்கிறதா என்று பார்க்க வேண்டும். மழைநீர் குழாய்களில் உள்ள அடைப்புகளைக் கம்பி, குச்சிகளைக் கொண்டு சுத்தம் செய்தால், 50% மொட்டைமாடி காப்பாற்றப்படும்.

எனது 25 வருட அனுபவத்தில், நிறைய கட்டிடங்களின் பாதிப்புகள் கீழ்க்கண்ட காரணங்களால் தான் ஏற்படுகின்றன என்று அறிந்துள்ளேன்:

  1. மொட்டைமாடி தளத்தில் மழைநீர் தேங்கி நிற்பது மற்றும் மழைநீர் குழாய்களின் அடைப்பு.
  2. மொட்டைமாடி தளத்தைச் சுத்தமாக வைக்காமல், மழைநீர் சரியாக வெளியேற வழி செய்யாமல் இருப்பது.
  3. உடைந்த / கரைந்த டைல்ஸ்களை அகற்றிவிட்டு புதிய டைல்ஸ்களைப் போட்டு, இணைப்புகளைக் (Joints) கோம்பினேஷன் மோர்டார் 1:3 ஆல் நிரப்ப வேண்டும். பிற இணைப்புகளையும் சரிசெய்து, மழைநீர் மொட்டைமாடியில் தேங்காமல் செய்ய வேண்டும்.

இணைப்புகளுக்கு 'டைல் கிரௌட்' எனப்படும் ரெடிமேட் பவுடர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
மழை பொழியும் போது மொட்டைமாடிக்குச் சென்று தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாமல் போனால், மழைநீர் தேங்கி நின்று 'வெதரிங் கோர்ஸ்'ஸில் உள்ள சிறிய துவாரங்கள் வழியாக RCC ஸ்லாப்க்குச் சென்று, அதிலுள்ள சிறிய துவாரங்கள் வழியே சென்று இரும்புக் கம்பிகளைத் துருப்பிடிக்கச் செய்து, பிறகு கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

அதன் பின், முதலில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து கான்கிரீட் கீழே விழுந்து, இரும்புக் கம்பிகளின் விட்டம் (8 மிமீ அளவு கம்பி 3 மிமீ விட்டமாக) துருப்பிடித்ததினால் குறைந்து, RCC ஸ்லாப் வலுவிழந்து உடைந்து விழ வாய்ப்புள்ளது. விரிசல்கள் உண்டாகி மழைநீர் வீட்டிற்குள் வருவது, சுவர்கள் ஈரமாக இருப்பது, இரும்புக் கம்பிகள் கான்கிரீட்டை விட்டு வெளியே தெரிவது எல்லாம், "என்னை (கட்டிடம்) கவனித்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுங்கள்" என்று அதற்குத் தெரிந்த மொழியில் கட்டிடம் கூறுகிறது என்று உணருங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக